சங்கடத்தில் ஜெயிலர்!
இந்தியில் ஹீரோயினாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த தமன்னா, தமிழில் "கேடி' படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமானார். பின்பு விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு டாப் ஹீரோயினாக வலம் வந்தார். பின்பு மார்க்கெட் சரிந்து மீண்டும் இந்திக்கே போய்விட்டார். சமீபத்தில் இந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் காதலை உறுதிப்படுத்திய நிலையில் விரைவில் திருமணத்தை அறிவிப்பார் எனத் தெரிகிறது. இப்படி வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள தமன்னா, நடிப்பிலும் அடுத்த லெவலுக்கு போய்விட்டார். அண்மையில் இந்தியில் வெளியான 'ஜீ கர்தா' என்ற வெப் தொடரில் வழக்கத்திற்கு மாறாக கவர்ச்சியை வாரி வழங்கியிருக்கிறார். கடந்த சில நாட்களாகவே அவர் ஹாட்டாக நடித்திருப்பது தான் ஹாட் நியூஸாக மாறியிருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் செம ஷாக். இதை பார்த்தே ஷாக்கில் இருக்கும் ரசிகர்கள், அடுத்து அவர் நடிப்பில் வெளியாகவுள்ள "லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெப் தொடரை பார்த்தால் என்னவாகும் என பாலிவுட் வட்டாரத்தில் பேசுகின்றனர். இத்தொடரின் டிரைலர் வெளியான போதே ஹாட் நியூஸாக மாறியிருந்தார். இது ஒருபுறம் இருக்க ரசிகர்களைத் தாண்டி அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரஜினியின் "ஜெயிலர்' படக்குழு சற்று சங்கடமாக இருக்கிறது. ஏனென்றால் இப்படத்தில் அவரது ரோல் ஒரு கண்ணியமான கேரக்டராம்.
பட்டியல் புதுசு!
கேப்டன் மில்லர் படத்தைத் தவிர்த்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என கமிட்டாகியுள்ளார் தனுஷ். இதனிடையே தனது 50வது படத்தை இயக்கியும் அதில் நடிக்கவுள்ளார். தன்னுடைய கரியரில் ஸ்பெஷலான படம் என்பதால் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு நகர்வையும் நகர்த்தி வருகிறார் தனுஷ். ஹீரோயினாக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அது சுமூகமாக முடிந்துள்ளது. ஹீரோயின் தேர்வு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இதுவரை தேர்வு செய்த நடிகர்களில் சிறு மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஏற்கெனவே விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்தீப் கிஷன் இடம்பெற்றிருந்த நிலையில், விஷ்ணு விஷால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளார். அவரது ரோலில் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளார். இந்நிலையில் புதுவரவாக அபர்ணா பாலமுரளி நடிகர் பட்டியலில் இணைந்துள்ளார். சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவும் சந்தீப் கிஷனும் தனுஷின் சகோதரர்கள் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்களாம். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கும் நிலையில் இசையமைப்பாளராக ஏ.ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் தனுஷ்.
பிடித்துப் போன பிரியா!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் '"மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து முடித்துள்ள விஷால், தனது அடுத்த படத்திற்காக மூன்றாவது முறையாக இயக்குநர் ஹரியுடன் கைகோர்த்துள்ளார். கார்த்திக் சுப்புராஜின் "ஸ்டோன் பென்ச்' நிறுவனமும், ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. விஷாலின் 34வது படமாக உருவாகும் இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கரை புக் செய்துள்ளார் ஹரி. பல முன்னணி ஹீரோயின்கள் லிஸ்ட்டில் இருந்தும், பிரியா பவானி ஷங்கரை டிக் செய்ததற்கு காரணம், ஹரியின் கடைசி படமான "யானை' படத்தில் அவருடைய நடிப்பும் டெடிகேசனும் மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். அதனால் யானை படம் சறுக்கலை சந்தித்தாலும் இப்படம் கைகூடும் என்ற நம்பிக்கையில் பிரியா பவானி ஷங்கர் ஒப்புக்கொண்டுள்ளாராம். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான வேலைகளும் பரபரவென நடைபெற்று வருகிறது.
வி.சே. வில்லனா?
கமல்ஹாசன் "இந்தியன் 2' படத்தை முடித்து விட்டு அ.வினோத் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் கமல்ஹாசனின் 233வது படமாக உருவாகும் நிலையில் ஆரம்பகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தனது சொந்த நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக அவரிடம் வினோத் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். முக்கியமான ரோலில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும், வில்லனாக வாய்ப்பு குறைவுதான் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது. ஏற்கெனவே "விக்ரம்' படத்தில் வில்லனாக நடித்துவிட்டதால் இந்த முடிவாம். படப்பிடிப்பு ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-கவிதாசன் ஜெ.